மின்னல் போல் வருபவன்

-------------------------------------------------------------------------

சரியாக பத்து வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு எனக்கு என் நண்பனின் நண்பனிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது...ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும், அதில் என் நண்பனைக் காணவில்லையென்று. அதிர்ச்சியில் பதறினேன் “காணோம்னா எங்கே, எப்படி”

அவனிடம் நான் பழகி இரண்டு வருடங்கள்தான் இருக்கும், இது நாள் வரை என் வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களில் மிகப்பெரிய யதார்த்தவாதி அவன். ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை கேட்கும் போது, நமக்கு சாதகமாக ஆலோசனை சொல்லும் போது, அவன் மட்டும் நடைமுறை சாத்தியம் என்னவோ அதை மட்டும் தான் சொல்லுவான், அது நான் விரும்பத்தகாத கூற்றாகக் கூட இருக்கும், ஆனாலும் அவன் சொல்லுவதுதான் மிகச்சரியாக இருக்கும்.

எங்கள் ஊரின் மிகப்பெரிய வழக்கறிஞர் ஒருவரின் மைத்துனன் அவன். தன் சகோதரியின் வீட்டிலேயே தங்கி தன் மாமாவுடன் உதவியாக இருந்தான். அப்போதுதான் சட்டம் முடித்திருந்தான். செப்டம்பர் கடைசி வாரத்தில் தன் மாமாவுடன் நீதி மன்றத்தில் இணைவதாக கூறியிருந்தான். வழக்கறிஞராக மிகப்பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.

பழகிய இரண்டு வருடத்தில் சில முறை மட்டுமே அவன் மது அருந்தி அதுவும் சிறிதளவு அருந்துவதை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அடிக்கடி, அதிக அளவில் குடிப்பதை அறிந்தேன். ஏன் என்ன காரணம் என்று கேட்டால் தத்துவார்த்தமாக, எல்லாக் குடிகாரனும் சொல்லும் சொத்தை சமாதானத்தை என்னிடமும் சொன்னான்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு என்னிடம் பேசினான், ராசிபுரத்தில் இருக்கிறேன், ஒரு கிடாவெட்டு விருந்து. மாலை ஈரோடு திரும்புவதாக கூறினான். ஈரோடு வரும் வழியில் பள்ளிபாளையம் தாண்டும் போது மாலை நான்கு மணிக்கு, காவிரியில் குளிக்க நான்கு பேரும் சென்றிருக்கிறார்கள். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அற்புதமாக நீச்சல் அடிக்கக் கூடியவன். இன்னும் அதிகமாக தண்ணீர் போகும் போதும் கூட ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை அந்த ஆற்றை நீச்சலிலேயே கடக்கும் வல்லமை படைத்தவன்.


ஆனால் அன்று ஆற்றில் இறங்கி நீந்தி கால்வாசி ஆற்றைக் கடக்கும் போது தீடீரென மூழ்கியிருக்கிறான். ஒரு விநாடி மேலே எம்பி “டேய் முடியல” என்றிருக்கிறான், அவ்வளவுதான் எங்கே என்றே தெரியவில்லை. உடன் வந்தவர்கள் சில அடிகள் தூரத்தில் இருந்திருக்கின்றனர். சில நிமிடங்கள் ஏதோ விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்து, இன்னும் சில நிமிடங்களில் ஏதோ விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட அந்தப் பகுதி மீனவர்கள், துணி வெளுப்போர் பரிசல் போட்டு வந்து பரபரப்பாய் தேடியும் அவன் எங்கே என்றே தெரியவில்லை.

எதுவும் முடியாத நிலையில் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அவனுடைய சகோதரியிடம் தகவல் சொல்லவேண்டி.

காணாமல் மட்டும் போனதாக மனது நினைத்தது. இறந்திருப்பான் என நினைக்கக் கூட தயங்கியது. எங்காவது தண்ணீருக்குள்ளேயே நீச்சல் அடித்து, ஏதோ ஒரு இடத்தில் கரையேறியிருப்பான், நிச்சயம் கண்டுபிடித்து விடுவோம் என ஒரு நம்பிக்கை.

பதட்டம், குழப்பம், வேதனை, பயம், நம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாம் அடுத்த சில மணி நேரங்கள் மனதைப் பிசைந்தது. காவல்துறை, தீயணைப்புத்துறை என யார் யாரோ வந்தார்கள், வெளிச்சம் மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. ஆறு ஓங்காரமாய் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிவரை அந்த ஆற்றங்கரையில் குறுக்கும் மறுக்குமாய் ஓடி, பழகிய முகத்திடமெல்லாம் ஏதாவது நம்பிக்கையான ஒரு வார்த்தை வராதா எனத் தேடினேன். அதே நேரம் நம்பிக்கையும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

“சரி காலையில் வந்து தேடுவோம்” என எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்ல, அலைபேசியை இறுகக் கையில் பிடித்தபடி, மூட மறுக்கும் இறுக்கமான விழிகளோடு எப்போது விடியும் எனக் காத்துக்கிடந்து, விடிந்தும் விடியாமல் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தால், இரவு நடந்த கவலையான பரபரப்பு இல்லாமல் அந்தப் பகுதி நபர்கள் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அதன்பின் ஒவ்வொருவராய் வர பல முறைகளில் இறுகிய மனதோடு தேடுதல் வேட்டை துவங்கியது, இனி உடல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து, தேடித்தேடி செவ்வாய்கிழமை இரவு நீரில் நொதித்துப் போன உடலை மட்டும் எடுத்தோம்.

சில நாட்களுக்குப் பின் அவன் இறந்த போது அலைபேசியில் அழைத்தவனைச் சந்தித்து பேசிய போது “ஏங்க எத்தன தடவ இந்த ஆத்த கிராஸ் பண்ணியிருக்கான், ஆனா, அன்னைக்கு மட்டும் குடிக்காம இருந்திருந்தா செத்துருக்க மாட்டான்” என்றான்.

குடிக்க நினைக்கும் போது, எப்போதாவது குடிக்கும் போதும், குடிப்பவர்களைப் பார்க்கும் போதும் அவன் ஒரு மின்னல் மாதிரி நினைவில் இன்னும் வந்து கொண்டேயிருக்கிறான்.

-------------------------------------------------------------------------

கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

28 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், உங்கள் நண்பரின் குடும்பத்திற்கு நேர்ந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு. குடி வீட்டையும் கெடுக்கும் என்றால் யார் கேட்கிறார்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள் :(

vasu balaji said...

இத ஏந்தான் கண்டு பிடிச்சானோ மனுசன். படிக்கவே வருத்தமா இருக்கு. எத்தனை எதிர்பார்ப்பை நாசம் பண்ணிடிச்சி. அனுதாபங்கள் கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்

நன்றி @@ வானம்பாடிகள்

பகிர்வுக்கு நன்றி நண்பர்களே.

பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனாலும் அந்த மரணம் மறக்கவே முடியாதது. அவன் உடல் தேடியபோது நடந்த மனித செயலற்ற செயல் ஒன்றை பின்னர் இடுகையாக எழுதுகிறேன்

நிகழ்காலத்தில்... said...

\\“ஏங்க எத்தன தடவ இந்த ஆத்த கிராஸ் பண்ணியிருக்கான், ஆனா, அன்னைக்கு மட்டும் குடிக்காம இருந்திருந்தா செத்துருக்க மாட்டான்” \\

தண்ணி உள்ள போனவுடன் சமுத்திரம் முழங்கால் மட்டம்னு நினைப்பு மாறிவிடுகிறது

விளைவு :((

என்ன மாப்பு பண்றது

அவனவனுக்கு தானா புத்தி வந்தாத்தான் உண்டு !!

காமராஜ் said...

எழுத்தில் வந்த அந்தப் பரபரப்பு
தொற்றிக்கொண்டது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
மது அருந்திவிட்டு நீச்சடிப்பது
மரணத்தை வெத்திலை பாக்கு வைத்து
அழைப்பதுபோலாகும்.
நூறு சதவீதம் மாரடைப்பு
சாத்தியமாகிற நேரம் அது.

அப்பாவி முரு said...

அரசாங்கமே ஊத்திக்கொடுக்கும் போது, இந்த மாதிரியான கதைகளுக்கு உச்சு கொட்டுவதை தவிர வேறோன்றும் சொல்ல முடியாது.






இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள் :(

Anonymous said...

intha pothaiku padichavanga padikathavanga yezhai panakaran endra pagupadey illai ella vargamum ithil yeno ippadi serazhiyaranga..ippa parunga ithu mathri ethanai kudumbangal?....

THANGAMANI said...

நன்று.

கலகலப்ரியா said...

//
குடிக்க நினைக்கும் போது, எப்போதாவது குடிக்கும் போதும், குடிப்பவர்களைப் பார்க்கும் போதும்//

:)
யகத்தினை அழிக்கணும்... இந்த அரக்கனும் மத்த அரக்கர்கள் கூட அப்போதான் அழியும்.. !

ஆழ்ந்த ஆத்திரங்கள்... !

ப்ரியா!

பழமைபேசி said...

அய்யோ.... எங்கூர்த் திருமூர்த்தி மலையில இதே பாடுதேன்.... இன்னமும்.... அவ்வ்வ்வ்.......

பிரபாகர் said...

குடியின் கோரத்தை வலியுடன் உணர்த்தியிருக்கிறீர்கள்...

பணம் பறிப்பதற்காகவே குளிக்கச் செல்பவர்களை இழுத்துச்சென்று கொன்று செருகி மறைத்து வைத்தார்கள் எனும் அவலத்தையும் கேள்வியுற்று நொந்திருக்கிறேன்...

மனம் கனக்கிறது கதிர்...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

// நிகழ்காலத்தில்... said...
என்ன மாப்பு பண்றது
அவனவனுக்கு தானா புத்தி வந்தாத்தான் உண்டு !!//

நன்றி @@ சக்தி

வரலைன்னா வாழ்க்கையே காலிங்க

// காமராஜ் said...
//மது அருந்திவிட்டு நீச்சடிப்பது
மரணத்தை வெத்திலை பாக்கு வைத்து
அழைப்பதுபோலாகும்.//

அவன் இறந்தபோது வயது 27. நீச்சல் மட்டுமல்ல வாகனம் ஓட்டுவதும்தான்

//நூறு சதவீதம் மாரடைப்பு
சாத்தியமாகிற நேரம் அது.//

நல்ல தகவல்

நன்றி @@ காமராஜ்

// அப்பாவி முரு said...
//இந்த மாதிரியான கதைகளுக்கு உச்சு கொட்டுவதை தவிர வேறோன்றும் சொல்ல முடியாது.//

நன்றி @@ அப்பாவி முரு

ஏனுங்க அரசாங்கம் ஊத்துங்கிறக்காக எல்லாருமா குடிக்கிறாங்க...

உச்சு கொட்டுவதால் ஏதும் பயனில்லை...
ஒருத்தர் குடிப்பதை நிறுத்தினால் அல்லது குறைத்தால் கூட போதும்



//தமிழரசி said...
intha pothaiku padichavanga padikathavanga yezhai panakaran endra pagupadey illai ella vargamum ithil yeno ippadi serazhiyaranga..ippa parunga ithu mathri ethanai kudumbangal?....//

நன்றி @@ தமிழ்

குடிக்கிற பார்ல இருக்குற சமத்துவம் உலகத்திலேயே பெருசுங்க

// THANGAMANI said...
நன்று.//

நன்றி @@ தங்கமணி

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
யகத்தினை அழிக்கணும்... இந்த அரக்கனும் மத்த அரக்கர்கள் கூட அப்போதான் அழியும்.. !

//ஆழ்ந்த ஆத்திரங்கள்... !//

இந்த கோபம் நல்லாயிருக்கே

நன்றி @@ ப்ரியா!


//பழமைபேசி said...
அய்யோ.... எங்கூர்த் திருமூர்த்தி மலையில இதே பாடுதேன்.... இன்னமும்.... அவ்வ்வ்வ்.......//

கோபி கொடிவேரியிலும் இதுதானுங்க

நன்றி @@ மாப்பு


///பிரபாகர் said...
பணம் பறிப்பதற்காகவே குளிக்கச் செல்பவர்களை இழுத்துச்சென்று கொன்று செருகி மறைத்து வைத்தார்கள் எனும் அவலத்தையும் கேள்வியுற்று நொந்திருக்கிறேன்...//

இதுவும் மிக மிக கசப்பான நிஜம் நண்பா

நன்றி @@ பிரபா

//பிரியமுடன்...வசந்த் said...
:(//

நன்றி @@ வசந்த்

ஆரூரன் விசுவநாதன் said...

நாயத்துக் கிழமை..... பழமையைப் பாரு.....

அடிச்சதெல்லாம் இறங்கிப் போச்சு.....தேங்.....கதிர் இப்படி பண்டரீங்க.....


அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

thiyaa said...

குடி குடியைக் கெடுக்கும் என்பது உண்மைதான் போலும்

பித்தனின் வாக்கு said...

நல்ல அறிவுரை ஆனா என்ன பன்ன குடிச்ச அப்புறம் தான் குடிக்ககூடாது தொனும். குடிக்கறத்துக்கு முன்னாடி தொனாது. அப்புறம் குடிச்சா சத்தமில்லாம தூங்கிடனும், இந்த மாதிரி வீரசாகஸம் எல்லாம் பண்ணகூடாது.

மாதவராஜ் said...

கஷ்டமாயிருக்கிறது....

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
நாயத்துக் கிழமை..... பழமையைப் பாரு.....

அடிச்சதெல்லாம் இறங்கிப் போச்சு.....தேங்.....கதிர் இப்படி பண்டரீங்க.....//

அய்யா... அவனும் இதேமாதிரி செப்டம்பர் இரண்டாவது வார நாயத்துக் கிழமைல தான் இறந்தானுங்க... அது ஞாபகம் வந்துது அதனால சொன்னேன்


//தியாவின் பேனா said...
குடி குடியைக் கெடுக்கும் என்பது உண்மைதான் போலும்//

ஆமாங்க

நன்றி @@ தியா

//PITTHAN said...
நல்ல அறிவுரை ஆனா என்ன பன்ன குடிச்ச அப்புறம் தான் குடிக்ககூடாது தொனும். குடிக்கறத்துக்கு முன்னாடி தொனாது.//

//குடிச்சா சத்தமில்லாம தூங்கிடனும், இந்த மாதிரி வீரசாகஸம் எல்லாம் பண்ணகூடாது.//

சரியா சொன்னீங்க

நன்றி @@ பித்தன்

//மாதவராஜ் said...
கஷ்டமாயிருக்கிறது....//

நன்றி @@ மாதவராஜ்

க.பாலாசி said...

மிகவும் வருந்தத்தக்க நிகழ்வுதான்...

ஒரு சில மணிநேரங்கள் நீடிக்கும் போதை இன்பத்திற்காக வாழ்க்கையையே தொலைத்து நிற்பவர்கள் ஏராளம்...(உயிரையும் சேர்த்து)

பாலகுமார் said...

நானும் ஒரு நண்பனை குடி போதை விபத்தில் இழந்துள்ளேன்
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

இரும்புத்திரை said...

இது மாதிரி ஒரு நண்பனை நாங்கள் கிணற்றில் இழந்தோம்

சந்தனமுல்லை said...

விறு விறுப்பாக படிக்க வைத்து கடைசியில் இப்படி ஒரு சோகம்...தங்கள் நண்பர் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்!!

ஈரோடு கதிர் said...

//க.பாலாஜி said...
மிகவும் வருந்தத்தக்க நிகழ்வுதான்...

ஒரு சில மணிநேரங்கள் நீடிக்கும் போதை இன்பத்திற்காக வாழ்க்கையையே தொலைத்து நிற்பவர்கள் ஏராளம்...(உயிரையும் சேர்த்து)//

நன்றி @@ பாலாஜி

பாண்டிச்சேரி போயிட்டு வந்திருக்கீங்க.... ம்ம்ம்ம்


//பாலகுமார் said...
நானும் ஒரு நண்பனை குடி போதை விபத்தில் இழந்துள்ளேன்
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.//


//இரும்புத்திரை அரவிந்த் said...
இது மாதிரி ஒரு நண்பனை நாங்கள் கிணற்றில் இழந்தோம்//

எல்லோருமே ஏதாவது ஒரு நண்பனை குடியில் இழந்திருப்போம்

நன்றி @@ பாலா

நன்றி @@ அரவிந்த்

//சந்தனமுல்லை said...
விறு விறுப்பாக படிக்க வைத்து கடைசியில் இப்படி ஒரு சோகம்...தங்கள் நண்பர் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்!!//

நன்றி @@ சந்தனமுல்லை

வால்பையன் said...

நான் கூட ஒருதடவை சென்னை கடலில் போக தெரிஞ்சேன்!

அதிலிருந்து தண்ணீர் என்றாலே அலர்ஜி!

உங்கள் நண்பர் இறந்ததற்கு என் வருத்தங்கள்!

நாஞ்சில் நாதம் said...

என்னுடைய சீனியர் ஒருவர் ஈரோடு பெருந்துறை சாலையில் வாய்காமேடு சானலில் குளிக்கும் பொது ஒரு மதிய வேளையில் அடித்து செல்லப்பட்டார். மூன்று நாள் கழித்து கண்டெடுக்கப்பட்டார். நன்கு நீச்சல் தெரிந்தவர். அன்று காலையில் தான் நாங்கள் 7 பேர் அந்த ஆற்றில் குளித்துவிட்டு திரும்பினோம். இது நடந்தது ஆகஸ்ட் 22, 1996. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை கடக்கும்போது ஒருவித தவிப்பு பயம் ஏற்படும்.

கதிர், உங்கள் நண்பரின் குடும்பத்திற்கு நேர்ந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஈரோடு கதிர் said...

// வால்பையன் said...
நான் கூட ஒருதடவை சென்னை கடலில் போக தெரிஞ்சேன்!

அதிலிருந்து தண்ணீர் என்றாலே அலர்ஜி!//

அந்த தண்ணியிலும் தானே பாஸ்

நன்றி @@ அருண்


// நாஞ்சில் நாதம் said...
என்னுடைய சீனியர் ஒருவர் ஈரோடு பெருந்துறை சாலையில் வாய்காமேடு சானலில் குளிக்கும் பொது ஒரு மதிய வேளையில் அடித்து செல்லப்பட்டார். மூன்று நாள் கழித்து கண்டெடுக்கப்பட்டார். நன்கு நீச்சல் தெரிந்தவர். அன்று காலையில் தான் நாங்கள் 7 பேர் அந்த ஆற்றில் குளித்துவிட்டு திரும்பினோம். இது நடந்தது ஆகஸ்ட் 22, 1996. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை கடக்கும்போது ஒருவித தவிப்பு பயம் ஏற்படும்.//

இனி அந்த வாய்க்காலை நான் கடக்கும் போது உங்கள் நினைவு வரும்

நன்றி @@ நாஞ்சில் நாதம்

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

really , really, if people realize that how precious is their life they will not drink. People who drink will make it a valid reason..