தோன்றிய எந்த ஒரு உயிருமே ஒரு நாள் மரணத்தை சந்தித்தே தீர வேண்டும்.... இது நியதி.....
இந்த வசனம் பேசுவதற்கு எளிதாகத் தான் இருக்கிறது.
ஆனால் மரணம் என்ற உண்மையை சந்திக்கும் போது எழும் வலியும், வெறுமையும் நிவர்த்திக்க முடியாதது, நிரப்ப முடியாதது.
27 வயதில், பார்த்துக் கொண்டிருக்கும் போதே, துடித்து இறந்து போன உடன் பிறந்த அண்ணனின் கடைசி உயிர்த்துளி, மிகப்பெரிய பலமாக இருந்த நண்பன் திடீரென நீரில் மூழ்கிப்போனதாய் தகவல் வந்த நிமிடம், இன்னொரு உரிமை மிக்க நண்பன் நோயின் கொடுமையில் சொட்டு சொட்டாய் உயிரை வழிய விட்ட கடைசி தருணங்கள்....என் வாழ்விலும் மரணம் ஏற்படுத்திய அதிர்வுகள் நிவர்த்தியாகாத வலியோடும், நிரப்ப முடியாத வெறுமையோடும் நின்று கொண்டேயிருக்கிறது....
அதன் பின் எத்தனையோ மரணங்களை நெருங்கிய வட்டத்தில் பார்த்தாகிவிட்டது. நிறைய கேள்விப்பட்டாகி விட்டது. கும்பகோணம் குழந்தைகள், சுனாமி அழிவு போன்ற பல .....கேட்ட, பார்த்த தருணத்தில் மனதை சுழற்றி, பிசைந்து....... பின் காலம் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு வேறு விசயங்களை மனதின் முன் கொண்டு வந்து.... இவற்றை பின்னுக்கு தள்ளி விட்டன.
ஆனால் மிக சமீபத்தில் கண்ணுற்ற இரண்டு மரணங்களை ஒட்டிய இரண்டு எழுத்தாக்கம் மிகப்பெரிய கீரலை மனதிலும், அதைவிடப் பெரிய சிந்தனைப் புகையை புத்தியிலும் கொண்டுவந்துள்ளது.
1. தீக்குளித்து இறந்துபோன முத்துக்குமாரின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் நீண்ட கடிதம்
2. இலங்கையில் கொலை செய்யப்பட்ட தி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மொழிபெயர்ப்பு கடிதம். http://www.kalachuvadu.com/issue-110/page26.asp
ஒரு கடிதம் தான் ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் மரணத்திற்கு (தற்கொலைக்கு) முன் அந்த மரணத்திற்கு நியாயம் கற்பித்து, வலிமையான முடிவை, குறிக்கோளை முன்னிருத்தி கிட்டத் தட்ட 10 பக்கங்களுக்கு மேல் தன் கருத்துக்களை பதிந்து வைத்த சாசனம்....
இன்னொன்று தன் சுயத்தை இழக்க மறுப்பதற்காக, தனக்கு சில நாட்களில் ஏற்படவிருக்கும் மரணத்தை (கொலையை) கடுமையாக எதிர் நோக்கி எழுதப்பட்ட கடிதம்....”பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்...” லசந்த விக்ரமதுங்க (கடிதம் எழுதிய அடுத்த நாள் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்)
மரணம் தன்னை அறியாமல் வந்து தழுவிக்கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாமல் ஏற்றுக்கொள்வதுதான் பெரும்பாலும். சில நேரங்களில் உறுதி செய்யப்பட்ட மரணம், நெருங்கிவரும் போது, கையறு நிலையில் எதிர்கொள்வது...
நெருக்கமானவர்களின் மரணத்தில் ஏற்படும் வெற்றிடத்தை எதிர்கொள்வதே நமக்கு இயலாத அயர்ச்சியை தரும்போது...
எப்படி தங்கள் மரணத்தை தாங்களாகவே தீர்மானிக்க முடிகிறது, அல்லது எதிர் நோக்கி காத்திருக்க முடிகிறது. பிறருக்கு நிகழ்த்துவது (கொலை) அல்லது தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்ளும் மரணம் பல நேரங்களில் உணர்ச்சி பூர்வமாக மட்டுமே கணநேரத்தில் உருவாவது.
எந்த ஒரு செயல் முத்துக்குமாரை தன் மரணம் நோக்கி தூண்டியிருக்கும், எந்த ஒரு நம்பிக்கை லசந்த விக்ரமதுங்கவை தனக்கான மரணத்தை நோக்கி காத்திருக்க வைத்திருக்கும்.....
எந்த நம்பிக்கை முத்துக்குமாரையும், லசந்த விக்ரமதுங்கவையும் கடிதம் எழுத தூண்டியிருக்கும், கிடைக்காத வார்த்தைகளுக்காக, பூர்த்தியடையாத வரிகளுக்காக தங்களின் சிந்திக்கும் திறன் மேல் சற்றே கோபம் கூட வந்திருக்கும் தானே.... எழுதும் போதே வலிமையான வார்த்தைகளை, முழுமையான வரிகளை கண்டபொழுது மனம் புன்முறுவல் பூத்திருக்கும் தானே, எழுதிய முதல் முறையிலேயே திருப்தி அடைந்திருப்பார்களா? எழுதும் போது மரணிக்கும் விநாடியை நினைத்து ஒரு கணம் மனம் குலைந்திருக்காதா? எழுதிய பின் பிழைத்திருத்தம் செய்யும் போது, சில வார்த்தைகளை மாற்றிக்கொண்டிருப்பார்களா?
இவர்களின் மரணம் காலப்போக்கில் நம்மால் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய ஒன்றாகிப் போய்விடுமா?
இவர்களின் மரணம் நோக்கிய குறிக்கோள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சிதைத்துக்கொள்ளுமா?
விடை தேட வேண்டிய வினாக்களை இந்த மரணங்கள் நம்முன் அழுத்தமாக விதைத்துவிட்டுத் தான் போயிருக்கின்றன.....
இந்த மரணங்களுக்கும் நம் மனதின் மையப் புள்ளியில் நிரப்பமுடியாத வெற்றிடமும், நிவர்த்திக்க முடியாத வலியும் இருந்தால்... அதுவே இப்போதைக்கு போதும்!!!!
6 comments:
**இவர்களின் மரணம் காலப்போக்கில் நம்மால் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய ஒன்றாகிப் போய்விடுமா?
இவர்களின் மரணம் நோக்கிய குறிக்கோள் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை சிதைத்துக்கொள்ளுமா?**
அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக தான் நாம் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் நண்பா..
இன்றுதான் முதல் முதலாய் உங்கள் வலைக்கு வந்தேன். அருமையான கவிதைகள் மற்றும் இக்கட்டுரை படித்தேன். நன்றாக உள்ளது உங்கள் என்ணம், எழுத்து. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
குங்குமம் மற்றும் விகடனில் உங்கள் படைப்புகள் வந்தமைக்கும் வாழ்த்துகள்.
kathir
2 mani meeram padiththeen
unmailee enaku kanner vanthuviddathu.paaraaddappada veeNdiya muyadchi
enakku tamil type theriyathu
Ln ragu chennimalai
மனம் இருப்பவர்களுக்குத்தான் இந்த வெற்றிடம் சாத்தியம். கதிர்
எல்லா மரணமும் ஒரு வெற்றிடத்தை தந்துவிட்டுத்தான் செல்கிறது!
எல்லா மரணமும் ஒரு வெற்றிடத்தை தந்துவிட்டுத்தான் செல்கிறது!
Post a Comment