சிரம் கரம் புறம் நீட்டாதீர்கள்!

காலை 9 மணிக்கு துறையூருக்கும் பெரம்பலூருக்கும் மத்தியில் இருக்கும் அந்தக் கிராமத்தில் இருக்க வேண்டும். காலை 5 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்தில் நாமக்கல் பெயர் தாங்கிய இரண்டு அரசுப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. இரண்டின் கண்ணாடியிலும் சாதாரணக் கட்டணம் என எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியமாக இருந்தது. 2011ல் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது அரசு ஒரு பெரிய தில்லாலங்கடித்தனம் செய்தது. அதற்கு முன்பு வரையில் புறநகர் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 28 பைசாவும், எக்ஸ்பிரஸ் என ஒன்றையணா ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டால் 32 பைசாவும் கட்டணம் என்றிருந்தது. அதிரடியாக கிலோமீட்டருக்கு 45 பைசா எனக் கட்டணத்தை உயர்த்தியது அரசு. தமிழகம் முழுக்க தனியார் புறநகர் பேருந்துகள் எங்கு இயக்கப்பட்டாலும் கி.மீக்கு 45 பைசாதான். இதில் தனியார் ட்ராவல்ஸ்கள் பொருந்தாது. ஆனால் அரசுப்பேருந்துகளில் சாதாரணக் கட்டணம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகளில் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்படாவிட்டாலும் கூட கி.மீக்கு 59 பைசா என வெகுஜோராக கொள்ளை தொடர்கிறது. இதில்லாமல் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், சொகுசுப்பேருந்து, தாழ்தளப் பேருந்து, அல்ட்ரா டீலெக்ஸ் எல்லாம் தனி வகை.

கோவையிலிருந்து 100 கி.மீ தூரத்திற்கு 59 ரூபாய் கொடுத்து அரசுப்பேருந்தில் ஏறினால் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் ஆகின்றன. அதுவே தனியார் பேருந்துகளில் 45 ரூபாய் மற்றும் பயண நேரம் 2 மணி 10 நிமிடம் மட்டுமே. ஈரோடு கோவைக்கு தனியார் பேருந்துகள் சொற்பமே என்பதனால் சாதாரணக் கட்டண அரசுப்பேருந்துகளும் மிக மிகச் சொற்பமே. எதில் ஏறினாலும் 59 ரூபாய் பிடுங்குவார்கள்.

எப்படி நாமக்கல்லுக்கு மட்டும் மனமிறங்கி சாதாரணக்கட்டணம் என 26 ரூபாய் மட்டும் வாங்குகிறார்கள் என யோசித்தபோது. ஈரோடு நாமக்கல் இடையே தனியார் பேருந்துகளின்போட்டி அதிகம். எக்ஸ்பிரஸ் என முறுக்கிக்கொண்டு நின்றால் போய்யா வெண்ணை எனச் சொல்லிவிட்டு தனியார் பேருந்துகளில் மக்கள் ஏறிவிடுவார்கள்.
காலை 5.15க்கு ஈரோட்டில் வண்டியைக் கிளப்பினார் ஓட்டுனர். இளைஞராகத்தான் தெரிந்தார். 56 கிமீ தானே முன்னப்பின்ன போனாக்கூட 6.30க்கு போய்டலாம் என நினைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல பள்ளிபாளையம் தாண்டவே 20 நிமிடங்களைத் தின்றுவிட்டார். சரி இருட்டாக இருப்பதால் ஓட்ட சிரமப்படுகிறார் போல என நானாக நினைத்துக்கொண்டேன். பள்ளிபாளையம் தாண்டும்போடு ஓரமாக நிறுத்தி நடத்துனர் வீட்டிலிருந்து வந்திருந்த காலை உணவை வாங்கிக்கொண்டார். திருச்செங்கோட்டில் பத்து நிமிடம் நிறுத்தினார்கள். வேலகவுண்டம்பட்டிக்கு முன்பாக ஒரு கிராமத்தில் பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தை நிறுத்திவிட்டு நடத்துனர் இறங்கிப்போய் மூன்று பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டார்.

பேருந்தில் இடது, வலது என இரு பக்கத்திலும் டிவி பெட்டி காலியாக இருந்தது. அதில் ஒன்றில் தண்ணீர் பாட்டில்களைப் போட்டுக்கொண்டார். ஒரு வழியாக நாமக்கல் பேருந்து நிலைத்திற்குள் நுழையும் போது மணி 6.58. ஈரோடு - நாமக்கல்லுக்குமான 56 கி.மீ தொலைவை, அதுவும் அதிகாலை நேரத்தில் இளைஞராக இருந்த அந்த ஓட்டுனர் பயணிக்க எடுத்துக்கொண்ட நேரம் 103 நிமிடங்கள். இளைஞர்களிடம் அநியாயத்துக்கு வேகம்(!) குறைந்து வருவது ஆபத்தானதோ எனவும் தோன்றுயது.

தமிழகச் சாலைகளில் நான் இதுவரை பயணித்ததில் மிக மிகக் கடுப்பான சாலை எதுவென்றால் நாமக்கல் துறையூர் சாலையைத்தான் சொல்வேன். அத்தனை வளைவுகளும், அத்தனை இக்கட்டான ஊர்களும், அத்தனை வேகத்தடைகளும் வேறெங்கும் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். அங்கிருந்து துறையூருக்கு 7.10க்குப் புறப்பட்ட அரசுப்பேருந்து 55 கி.மீ தூரத்தை 110 நிமிடங்களைத் தின்று வெற்றிகரமாக காலை 9 மணிக்கு சென்றடைந்தது.
துறையூரிலிருந்து பெரம்பலூர் வழியில் இருக்கும் அந்த கிராமத்திற்குச் செல்ல பேருந்துகள் எதுவும் தென்படவில்லை. காஞ்சிபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்து மட்டும் இருந்தது. தயக்கத்தோடு நடத்துனரை அணுகி நிறுத்துவீர்களா எனக்கேட்டேன். ”ம்ம்ம், கண்டிப்பா 7 ரூபா சில்லறை வேணும்என்றார்.

இரண்டு பேர் அமரும் இருக்கையில் உள்பக்கம் அமர்ந்திருந்தேன். அதற்குப் பக்கத்து மூவர் இருக்கையின் உள்பக்கம் ஒரு பெண் வந்து அமர்ந்தார். காலை 5 மணிக்குத் தொடங்கிய பயணத்தில் முதன்முதலாகக் கண்ணில்படும் பெண். பயணங்களில் கண்களில் பதியும் பெண்கள் குறித்துமட்டுமே ஒரு கத்தை அளவிற்கு எழுதலாம். அநிச்சையாய் கண்கள் வலப்பக்கம் இழுத்தன. நடத்துனர் வந்தார். ஏழு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டேன். அந்தப் பெண் டிக்கெட்டுக்கு 500 ரூபாய்த் தாளை நீட்டினார். நடத்துடனர் கொந்தளிப்பார் என நினைத்த கணத்தில் மெல்ல புன்னகைத்தவாறு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். அந்தபெண் அதில் ஒரு நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார். ”அடுத்தமுறை தாங்க!” என வாங்க மறுத்து கடந்துபோனார். அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்க்கவே மிரட்சியாக இருந்ததாலோ என்னவோ அந்தப்பக்கமே திரும்பவில்லை.



அங்கு வேலைகளை முடித்து துறையூரை அடையும்போது இரவு 10.20. துறையூரில் இறக்கிவிட வந்த கார் ஓட்டுனர்நாமக்கல்லுக்கு உறுதியா பஸ் இருக்கும் சார், முசிறி திருச்சி ரவுண்டானா போய், பஸ் ஸ்டேண்ட் போலாம்எனச்சொன்னார். பேருந்து நிலையத்தில் துறையூர்உதகை அரசுப்பேருந்து நின்றது. இங்கிருந்து இந்நேரத்துல யாரு ஊட்டிக்கு போவாங்க என்ற நினைப்போடு ஏறினேன். கடைசி இருக்கைதான் கிடைத்தது. துறையூரிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையை நினைத்தால் முதுகெலும்பு வலித்தது. வேறு வழியில்லை என்ற எண்ணத்தோடு ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்து கிளம்பும் சமயத்தில் இருவர் ஓடி வந்து சீட் இருக்கா என்றார்கள். ”அய்யாஎல்லாமே மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கீழ உட்கார்றதுனா ஏறிக்குங்கஎன்றார் நெற்றியில் பளிச்சென விபூதி பூசியிருந்த புன்னகை முகம் கொண்ட நடத்துனர்.

என் அருகில் இருந்த அனைவருமே ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், அன்னூர் என்றே டிக்கெட் வாங்கினார்கள். இந்த நேரத்தில் இங்கிருந்து ஊட்டிக்கு பேருந்து இயக்குவதில் எதோ அர்த்தம் இருக்கும்போல எனத்தோன்றியது. திருச்சி முசிறி ரவுண்டான கடக்கும்போது விளக்குகள் அணைக்கப்பட சப்தமாக....

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா.”

பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. காலையிலிருந்து சேர்ந்திருந்த அத்தனை அலுப்பும் பேருந்துகள் குறித்த கடுப்பும் நொடிப்பொழுதில் கரையத் தொடங்கின. அந்த ராத்திரியின் மென்மையும் சீறும் பேருந்தின் வேகமும் ஒலிக்கும் பாடலின் சுவையும் இனம்புரியா ஒரு இதத்திற்குள் என்னை முக்கியது. பாடலில் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தவன் வேகமாகக் கடந்த காலத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

எப்படியும் 30 வருடங்கள் இருக்கும். ஆரம்பப் பள்ளி வயது. பவானியிலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் எங்களுக்கு டவுன் பஸ் என் முருகன் ட்ரான்ஸ்போர்ட்டின் ”பி3” மட்டுமே இருந்த காலம். பவானி பேருந்து நிலையம் அப்போது பவானி ஆற்றங்கரையில் இருந்தது. ஆற்றை ஒட்டிய பகுதியில்தான் அந்தியூர் பேருந்துகள் நிற்கும். பேருந்துக்கும் ஆற்றுக்கும் இடையிலான பத்திருபது அடி தூரம் மூத்திரத்தில் முங்கிக் கிடக்கும். எப்போது அந்த பி3 பஸ்ஸில் ஏறினாலும், பிச்சை எடுக்கும் ஒரு பார்வையற்றவர் “உச்சி வகுந்தெடுத்து” பாடலைத்தான் பாடுவார். பச்சை மலப் பக்கத்துல என அவர் இழுக்கும்போது என்க்கு இரட்டைக்கரடு நினைவுக்கு வந்துவிடும். அப்போது பார்த்த மலை அது மட்டுமே. நீளமாக அந்தப் பாட்டைப் பாடி பிச்சையெடுத்து இறங்குவார். பல வருடங்கள் கழித்து ஜம்பை சாந்தி தியேட்டரில் ”ரோசாப்பு ரவிக்கைக்காரி” படம் பார்த்தபோது அந்தப் பாடல் வந்தபோது அதிர்ந்து போனேன். வேறுவழியின்றி சிவக்குமார் முகத்தில் அந்த பார்வையற்ற பிச்சைக்காரரைக் கண்டேன். சினிமாக்காரர்கள் அந்தத் பார்வையற்றவரிடமிருந்து திருடி உச்சி வகுந்தெடுத்து பாட்டை அதில் உடுக்கைச் சத்தமெல்லாம் சேர்த்துக் கொண்டார்கள் என ரொம்ப நாட்கள் நினைத்திருந்தேன். இப்போது இன்னார் பாடியது, இன்னார் எழுதியதென்றெல்லாம் இணையத்தில் தேடி மனதில் நிரப்பினாலும்கூட ஒட்ட மறுக்கிறது.

எப்போது தூங்கினேன் என்றுகூடத் தெரியவில்லை. கண் விழித்தபோது மூலப்பட்டறையைக் கடப்பது தெரிந்தது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 1.05 எனக்காட்டியது. 3 மணி சுமாருக்குத்தான் வீடு வந்து சேருவேன் எனச் சொல்லியிருந்தேன். நிஜமாகவே ஈரோடு வந்துவிட்டேனா என வெளியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். உச்சி வகுந்தெடுத்துப் பாடலும், பி3 குருட்டு பிச்சைக்காரரும் மனதில் புரண்டு கொண்டிருந்தன. சிலர் சில அறிமுகங்களைச் செய்யும் சூழலும், விதமும் அது அவர்களுடையதென்றே ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் ஆக்குகிறார்களோ இல்லையோ நாம் நமக்குள் அப்படியாவே வடித்துக் கொள்கிறோம்.


-


2 comments:

Kathasiriyar said...

ROFL : - அதிகாலை நேரத்தில் இளைஞராக இருந்த அந்த ஓட்டுனர் பயணிக்க எடுத்துக்கொண்ட நேரம் 103 நிமிடங்கள். இளைஞர்களிடம் அநியாயத்துக்கு வேகம்(!) குறைந்து வருவது ஆபத்தானதோ எனவும் தோன்றுயது.

க்ருஷ் said...

arumai