மாதொருபாகன் வாசிப்பனுபவம்


நான் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பிள்ளை பெறத் துப்பில்லையே என்ற ஊராரின் குத்தலுக்குப் பயந்து மறுமணம் செய்த கணவனால் அறுத்துவிடப்பட்டு தனது சாவு வரை இனம் புரியா முரட்டுத்தனத்துடனே வாழ்ந்த வேரிப்பொன்னாவும், ஊராரின் பேச்சுக்குப்பயந்தும், மறுமணத்திற்குத் தயங்கும் கணவனைக் காணவும் முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சரசாவும் ஊருக்கு ஊர் வேறு வேறு பெயர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தைப் பேறில்லாமல் வாழ்ந்த ஒரு விவசாயத் தம்பதியின் வாழ்க்கையும், அதற்கான தீர்வையெட்ட முயலும் அவர்களின் போராட்டமுமே கதை!

பூவசரமரத்தின் அடியில் தொடங்கிய கதை ஒரு பூவரசம் மரத்தின் அடியிலேயே முடிகிறது. இடைப்பட்ட பக்கங்களில் மிகப் பெரிய அதிர்வுகளை வழியவிடுவதோடு, பல போலித்திரைகளைக் கிழித்துவிட்டும் போகின்றது.

கதையின் களம் நான் அறிந்த, பழகிய திருச்செங்கோடு என்பது கூடுதல் சுவாரசியத்தைக் கூட்டினாலும், திருச்செங்கோட்டின் அறியாத பக்கங்கள், வாசித்து பல நாட்கள் ஆகியும் அதிர்வுகளிலிருந்து மீளாமலே வைத்திருக்கின்றது.

காளி, பொன்னா இருவரையும் சுற்றித்தான் கதை, ஆனால் கதையோ அவர்கள் அதுவரை அவள் வயிற்றில் தறிக்க மறுக்கும் கருவை கருவாகச் சுமக்கிறது. கல்யாணமான புதிதில் மாமனார் வீட்டில் காளி நட்ட பூவரசு பூத்துக் குலுங்குகிறது, அப்பன் வீட்டிலிருந்து பொன்னா ஓட்டிவந்த மாடு பட்டி முழுதும் பெருகுகிறது, ஆனாலும் காதலையும் காமத்தையும் திளைக்கத் திளைக்க அனுபவித்த காளிக்கும் பொன்னாளுக்கும் அதை அடையாளப்படுத்த ஒரு முறை கூட தீட்டுத் தள்ளிப்போகவில்லை. வருடங்கள் ஓட வாரிசு என்பதற்காக இன்னொரு திருமணத்தை பொன்னாளின் குடும்பமே ஊக்குவித்தும் காளி மறுப்பதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.

கிண்டல் கேலிகளுக்கு காளியின் ஆண்மையை இரையாக்குவதிலும், பொன்னாளின் உடலைக் களவாட முனைவதிலும் உலகம் ஓயாமல் துடிப்பதில் கால வேறுபாடுகளுக்கு இடமில்லை..

தண்டுவனாய்ப் போன நல்லுக்கண்ணு சித்தப்பா மட்டுமே யதார்த்தத்தை திணித்து அவ்வப்போது குடும்பம் குழந்தைமேல் இருக்கும் அதீதப் பாசத்தைக் கொஞ்சம் மட்டுப் படுத்துகிறார். ஆனாலும் விதை விதைப்புகளிலும், நல்லது கெட்டதுகளிலும் விதைக்கப்படும் அவமானம் கிளைவிட்டு ‘மலடி’ பொன்னாளையும் ’வறடன்’ காளியையும் கொடூரமான அழுத்தத்தை சுமத்துகிறது.

ஒரு குழந்தைக்காக எதையும் செய்யத் துணியும் பொன்னா ஒரு கட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து திருச்செங்கோடு மலைமேல் இருக்கும் ‘வறடிகல்’ சுத்தத் துணிகிறாள். வறடிகல் என்பதை நேரில் கண்டவர்களுக்குத்தான் அந்த விபரீதம் புரியும். ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கும் ஒரு பாறையின் விளிம்பில் நிற்கும் கல்லின் ஓரமாய் ஓரடித் தடத்தில் சுற்றி வரவேண்டும். சற்றுத் தவறினாலும் உடல் சிதறிவிடும். பொன்னா சுற்ற துணியும் போது ஒருவேளை பொன்னா தவறிவிழுந்து செத்துப்போனால், தானும் விழுந்து சாகும் முடிவோடு உடன் போகிறான் காளி. வறடிகல் சுற்ற பொன்னாளோடு போகும் இடத்தில் கிடைத்த தனிமை, அமைதி தூண்டிவிட அவளைக் கலைத்து கூட முற்படும் நேரத்தில் “ஏம்…மாமா கடைசி கடைசியா தர்றியா” எனக் கேட்கும் நிதர்சனம் பொளிச்சென முகத்தில் அறைகிறது. 

எதுவும் தீர்க்கமுடியா சிக்கலாய் இருக்கும் பிள்ளைத் தேவைக்கு, ஓரிரவில் பொன்னாளின் தாயும் காளியின் விதவைத்தாயும் கிசுகிசுப்பாய் பேசுவது பொன்னாளுக்கும், காளிக்கும் புதிராகவே இருக்கிறது. பிறிதொரு மாலை ஒரு மரத்துக் கள்ளுக்களையத்தோடு மங்கிய இருளில் இருக்கும் காளியைச் சந்திக்க வருகிறாள் விதவைத்தாய். தாயும் மகனும் பரஸ்பரம் கள் குடிக்கும் பழக்கத்தை இருவரும் அறிந்திருந்தாலும், முதன் முறையாக அந்த இருளில் சம்பந்திகளுக்குள் பேசிய ரகசியத்தை மீட்க தாய்க்கு ஒரு சொம்பில் கள்ளை ஊற்றி நீட்டுகிறான். 

மாது ஒரு பாகனாக இருக்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரனின் திருவிழா காலத்தில் முதல் நாளில் மலை இறங்கிய சாமி, பதினான்காம் நாள் மலையேறும் நாளன்று பிள்ளை இல்லாத பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக, அவர்களின் சுய விருப்பத்தின் பேரில், தெளிவில் மங்கிய இருளில் சாமிகளாய் திரியும் ஆண்களில் யாரோ ஒருவருடன் கூடி பிள்ளைக்கான வித்தை தாங்கி வரலாம் என்ற வழக்கம் இருப்பதைச் சொல்லி இந்த முறை பொன்னாளை அனுப்பிப் பார்க்கலாம் என இரண்டு குடும்பமும் விரும்புவதாய்ச் சொல்ல பதினாலம் நாள் திருவிழா குறித்து அறிந்திருந்த காளிக்கு முதல் அதிர்ச்சி குடியேறுகிறது. அடுத்து அம்மா சொன்னதை காளி பொன்னாளிடம் சொல்லி ”நீ அப்படி போவியா” எனக் கேட்க, எதையெதையோ செய்து பார்த்த பொன்னா, அதே நினைவில் ”நீ சொன்னா போறேன்” என்று சொல்ல குடியேறிய அதிர்ச்சி கொடி நாட்டுகிறது. கொடி நாட்டிய அதிர்ச்சி மெல்ல அவனுக்குள் இனம் புரியா கோபத்தோடு, பொன்னா மேல் பிரியத்துக்கு மாற்றான உணர்வைத் தூண்டுகிறது.

பதினாலாம் நாள் திருவிழாவிற்கு பொன்னாவை அனுப்ப காளியைத் தவிர எல்லோருமே உடன்படுகின்றனர். அதற்காக காளியை மாற்றக் கையாளப்படும் யுக்தி, பொன்னா என்ன செய்தாள், காளி என்ன செய்தான் என்பவை கனமாய் உட்புகுந்து மனதின் மையத்தில் சம்மனமிட்டு அமருகிறது. கடைசியாய் அழுந்தும் தலைக்கயிறும், மேலே விரிந்த பூவரசங்கிளையும் ஒரு முறை நம்மை உலுக்கிவிட்டே நிறைகிறது.

எந்தச் சிக்கலுக்கும் மனிதன் ஒரு தீர்வை இனம் கண்டு வைத்திருப்பதையே பதினாலாம்நாள் திருவிழாவில் சாமிகள் கொடுக்கும் பிள்ளை என்பதொரு தீர்வாய் வைத்திருந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதே சமயம் மலடி என்று பெண்ணை மட்டுமே ஒதுக்காமல் ஆண் வறடனாக இருந்தால் என்ற கேள்விக்கு தீர்வாக சாமி கொடுக்கும் பிள்ளைகள் ஒரு வாய்ப்பாகவும் இருந்திருக்கின்றது. கருதங்காத கர்ப்பபைகளை மட்டுமே குறை சொல்வதை விடுத்து, வலுவான உயிரணுக்கள் அற்ற விந்துப் பைகளும் இருந்திருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ளும் முகமாகவே அந்தக் காலத்து கிராம சனங்கள் இந்த வாய்ப்பை முன்னிறுத்தியிருக்க வேண்டும்.

அதேகட்டத்தில் இது போல் நடந்திருக்குமா என்ற எண்ணத்தை பலகாலமாய் கற்பு குறித்து நிறுவப்பட்ட மாயத்திரைகளில் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. சாமிகளாய் போகும் ஆண்கள் குறித்து கேள்வியெதும் எழாமல், தன் கருப்பைக்குள் ஒரு உயிர்தாங்கி வருவதற்காக நிர்பந்திக்கப்படும் பொன்னா குறித்த கவலை தொற்றுவதும் ஒரு சமூகச் சாபம்தான்.

_________________________________________________________
புத்தகம்: மாதொருபாகன்
ஆசிரியர் : பெருமாள் முருகன் www.perumalmurugan.com
வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ.140

-0-


பெருமாள் முருகனின் கங்கணம் புத்தகம் குறித்த பார்வை


-

22 comments:

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு கதிர்! பகிர்விற்கு நன்றி!

Sethu said...

புத்தகம் படிக்க ஆசையா இருக்கு.
Sethu(S)

ராமலக்ஷ்மி said...

நேர்த்தியான பகிர்வு.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அழகான விமர்சனம் கதிர்.வாழ்த்துக்கள்.படிக்க வேண்டிய புத்தகம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முடிவு சோகமா இல்ல சுகமா? இதைப் பொறுத்துத் தான் வாங்கப் போறேன் :)

காமராஜ் said...

அருமையான பகிர்வு.அருமையான அறிமுகம்.கொடுத்து வைத்தவர் பெருமாள் முருகன்.அவருக்கெனது அன்பைச்சொல்லுங்கள் கதிர்.
நலம் தானே என்மேல் ஏதும் கோபமில்லையே ?.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான நூல் விமர்சனம் - படிக்க வேண்டும் - பகிர்வினிற்கு நன்றி கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான பகிர்வு கதிர்.

சே.குமார் said...

அருமையான பகிர்வு.

அன்பரசன் said...

இந்த பதிவின் வரிகள் புத்தகத்தை படிக்க தூண்டுகின்றன...
விவரித்திருக்கும் விதம் அருமை.

Gopi Ramamoorthy said...

மாதொரு பாகனைப் பாதிக்கு மேல் படித்துவிட்டேன். படித்தவரை பிடித்திருக்கிறது

பழமைபேசி said...

மாப்பு,

கங்கணம், மாதொருபாகன், கூளமாதாரி எல்லாம் பத்திரமா வெச்சிருக்கீங்க அல்ல? வந்து எடுத்துக்குறேன்... இஃகிஃகி!! நன்றி!!

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

நல்லாருக்கு கதிர்.. படிக்கணும்.

வானம்பாடிகள் said...

புத்தகத்தைப் போன்றே அருமையான விமரிசனம் கதிர்.

இராஜராஜேஸ்வரி said...

நல்ல விமரிசனம். புத்தகத்தைப் படிக்கத்தூண்டுகிறது.

க.பாலாசி said...

பெருமாள்முருகன்மேல் இன்னும் அழுத்தமான ஒரு அபிப்ராயம் இந்த விமரிசனத்தினால் விளைகிறது. கண்டிப்பாக இதையும் படிக்கவேண்டும். கூடுதலாக இந்த வட்டாரவழக்கை முழுமையாக அறிவதிலும் ஆர்வம் இருக்கிறது.

VELU.G said...

நல்ல விமர்சனம்

Mahi_Granny said...

படிக்கத் தூண்டுகிற விமர்சனம். நல்ல பகிர்வு.

கும்க்கி said...

ம்....

இராஜராஜேஸ்வரி said...

தீர்வையும் காட்டியிருக்கும் கதை நன்று.

நாடோடி இலக்கியன் said...

சிறப்பான இடுகை கதிர். நேற்றுதான் மாதொருபாகன் வாசித்து முடித்தேன். அதனைக் குறித்து எழுத எண்ணம். மற்றவர்களின் பாரவைக் குறித்து அறிய தேடியதில் உங்களின் இந்த இடுகை. இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை அப்படியே உங்களின் எழுத்தில் பார்க்கிறேன்.

Abinantha Kangeyan said...

வெக்கம் கெட்டவர்கள் ! தங்களின் தாய்க் கலாச்சாரத்தையே குறை கூறுகிறார்கள், வாசிபதற்கு அருமை என்றும், சிறந்த நடை என்றும் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்கள், ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு கொள்ளலாம் என்றும் அவ்வாரே நம் முன்னோர்கள் வாழ்ந்தனர் என்று வரலாற்றை மாற்றி எழுதுவது தான் உங்களுக்கு சிறந்த படைப்பா ?
உங்களின் சொந்த பிறப்பைப் பற்றி கீழ்த்தரமாக ஒருவன் கூறினாலும் அதிலுள்ள நயத்தைப் பார்த்து பாராட்டிக்கொண்டிருங்கள் ! வாழ்க உங்கள் நவ நாகரீகம் !